ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் முருகன், தன் தந்தையின் மரணம் தொடர்பாக வெளிநாட்டில் வாழும் அவர் தாயுடன் தொலைபேசி மூலமாக பேசுவதால் என்ன பாதுகாப்பு பிரச்சனை ஏற்படப்போகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக நளினியின் தாய் பத்மா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். மேலும், லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். ஏற்கனவே, முருகனின் தந்தை காலமானபோது, அவரது உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டதையும் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை எனவும், இந்தியாவுக்குள் உறவினர்களிடம் பேச அனுமதிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. சட்டமன்றத்தில் ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, அவர்களை தங்கள் உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இது இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால், வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் வீடியோ கால் மட்டுமல்லாமல், தொலைபேசி வாயிலாகக் கூட சிறைக்கைதிகளைப் பேச அனுமதிக்க விதிகள் இல்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி கிருபாகரன், தன்னுடைய தந்தையின் மரணம் தொடர்பாக வெளிநாட்டில் வாழும் தன் தாயுடன் முருகன் தொலைபேசி மூலமாகப் பேசுவதால் என்ன பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட போகிறது என கேள்வி எழுப்பினார். மேலும், முருகன் வெளிநாட்டவராக இருந்தாலும் மனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்றுதான் என கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன் மீண்டும் வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.