சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வரும் தொகுப்பு ஊதியர் மற்றும் தினக்கூலி ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை மற்றும் பணப்பயன்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரத்தில் கருப்பு பேட்ச் அணிந்து இரண்டு நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து புதன்கிழமை மாலை ஜாக் கூட்டமைப்பின் சார்பாக மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக தலைமை அலுவலகம் முதல் தொலைதூரக் கல்வி இயக்ககம் வரை நடைபெற்ற போராட்டத்தில் ஊழியர், ஆசிரியர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.