கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவர், காரமடை அருகே தேவனாபுரத்தில் சுப்பம்மாள் என்பவரது தோட்டத்தில் அடிக்கடி ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார். அப்படி வழக்கம் போல், இவர் நேற்று அந்த தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு இடத்தில் மட்டும் கடும் துர்நாற்றம் வீசியுள்ளதை உணர்ந்துள்ளார். உடனடியாக சந்தேகமடைந்த கருப்புசாமி, அந்த இடத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு அழுகிய நிலையில் எலும்புக் கூடுகள் துண்டு துண்டாகக் கிடந்துள்ளது. இதைப் பார்த்ததும் கருப்புசாமி அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், இது குறித்து காரமடை காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் துணை சூப்பிரண்ட் பாலாஜி, காவல் ஆய்வாளர் ராஜசேகர், நவநீத கிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வந்த காவல்துறையினர் பார்த்தபோது, துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் அழுகி கிடப்பது தெரியவந்தது. மேலும், அந்த உடல் ஆணா அல்லது பெண்ணா? என்பதைக் கண்டுபிடிக்காத நிலையில் இருந்துள்ளது.
இதையடுத்து, அந்த உடலைப் பற்றிக் கண்டுபிடிக்க தடயவியல் நிபுணர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், அங்கு வந்த தடயவியல் நிபுணர்கள், அந்த எலும்பு துண்டை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், அந்த உடல் 50 வயது முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் என்று அடையாளம் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தேவனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காணாமல் போன நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் விசாரணையின் முடிவில் பிணமாகக் கிடந்தது யார் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற விவரம் தெரியவரும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.