Skip to main content

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? -பதிலளிக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

How much money is allocated only for beautifying Mhabalipuram? - High Court questioned

 

 

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட்டு தெரிவிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு செயலர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி அமர்வு, மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய தமிழக சுற்றுலா துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் தொல்லியல் துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.

 

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில்,  வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மாமல்லபுரம் போன்று,  16 சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5,109 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாமல்லபுரத்திற்கு மட்டும் எவ்வளவு நிதி எனச் சுட்டிக்காட்ட வேண்டும். இதற்கு மத்திய அரசு தற்போதுவரை, உரிய பதில் அளிக்காததால்,  மாமல்லபுரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றும், இல்லையென்றால், சம்பந்தப்பட்ட செயலாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம் என்றும் எச்சரித்தனர். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்