மனிதன் தான் பயன்படுத்தும் அடிப்படை வசதிகளில் மின்சாரம் இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்தது. ஏனெனில் கனிணி முதல் உயர்தர சிகிச்சை வரை மின்சாரம் தேவையானது . எனவே தான் அனைத்து வீடுகளிலும் 2020 க்குள் மின்சாரம் வசதியை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மின்சார சட்டம் - 2003 ல் உற்பத்தி விநியோகம் , ஒழுங்குமுறை ஆகியவற்றைப் பற்றிய அதிகாரங்களையும் , விதிகளையும் விளக்குகிறது. வீட்டு மற்றும் வணிக மின் இணைப்பு பெற , அதற்கான பிரத்யேக படிவத்தை (படிவம்-1) இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்து , மின் துறை அலுவலகப் பிரிவில் கொடுக்க வேண்டும். உரிமையாளர் இல்லாமல் மின் இணைப்பை பெற விரும்புபவர்கள் , உரிமையாளர்களிடம் ஒப்புதல் கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒப்புதல் கடிதம் கொடுக்க மறுத்தாலோ , உரிமையாளர் இல்லாமல் இருந்தாலோ , மனுதாரர் அதற்கென சட்டப்பூர்வமான சுவீகாரச் சான்றுடன் , படிவம் - 6 மற்றும் ஈட்டுறுதி ஒப்பந்தத்துடன் (Indemnity Bond) , இரண்டு மடங்கு செக்யூரிட்டி டெபாசிட் பணத்தையும் செலுத்த வேண்டும். படிவத்தை நேரிலோ (அல்லது) தபாலிலோ கொடுத்தவுடன் , அதற்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய கட்டிடங்களுக்கு சான்றளிக்கப்பட்ட மின் ஒப்பந்ததாரர் மூலமாக ஒயரிங் வேலைகளை , முடித்தவுடன் , உங்கள் பகுதிக்கான உதவிப்பொறியாளரை அணுகி , மேற்கொண்டு மின் இணைப்பைப் பெறலாம். மின் இணைப்பு ஒரு முனை மின் இணைப்பு (Sigle Phase) மற்றும் மூன்று முனை மின் இணைப்பு (Three Phase) என இரு வகையாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.
தற்காலிக மின் இணைப்பு :
குடியிருப்பு வீடுகள் , வணிக வளாகங்கள் , தொழிற்சாலைகள் மற்றும் விழாக்காலங்களில் தற்காலிக மின் இணைப்பு பெற விரும்பும் ஒருவர் , குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தற்காலிக மின் இணைப்பைப் பெறலாம்.
குறைத்தீர்ப்பு :
ஒவ்வொரு வாரமும் பிரதி திங்கள்கிழமை , மக்கள் குறைத்தீர்க்கும் நாள் என வைக்கப்பட்டு குறைகள் அப்பகுதி கண்காணிப்பு பொறியாளர் முன்பு விசாரிக்கப்படும். கண்காணிப்பு பொறியாளர் நுகர்வோர் குறைத்தீர்ப்பின் அமைப்பின் தலைவராவார்.அதன் படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் மின் இணைப்பு சமந்தப்பட்ட குறைகளை மனுவாக அளித்து தீர்வை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் மின்சார சட்டம் - 2003 படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ( Tamilnadu Electricity Regulatory Commission ) மற்றும் மின் நுகர்வோர் குறைத்தீர்க்கும் மன்றம் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. மின் நுகர்வோர் தங்கள் குறைகளை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அணுகி உடனடியாக தீர்வை பெற்றுக்கொள்ளலாம். இதற்காகவே இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , மின் நுகர்வோர் குறைத்தீர்க்கும் மன்றம் இரண்டும் சென்னையில் உள்ளது. இதற்கான முகவரி : 19-A , ருக்மணி லட்சுமிபதி சாலை , எழும்பூர் , சென்னை -600008 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. மின் இணைப்பு தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் இந்த அலுவலகத்தை அணுகி தீர்வை பெற்றுக்கொள்ளலாம்.
நுகர்வோர்களுக்கு மின் இணைப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் ஒழுங்குமுறை ஆணையத்தையோ (அல்லது) குறைத்தீர்க்கும் மன்றத்தையோ அணுகி இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.
1.புதிய சேவை மின் இணைப்பு , கூடுதல் சுமை , தற்காலிக இணைப்பு , இணைப்பு சேவை மாற்றம் , விலைப்பட்டியல் போன்ற கோரிக்கைகளை நிராகரித்தால் ஒரு நாள் தாமதத்திற்கு ரூபாய் 100 முதல் அதிகபட்சம் ரூபாய் 1000 வரை மின் நுகர்வோர்கள் இழப்பீடாக பெற முடியும்.
2. மின் அளவி மாற்றித்தராமல் இருந்தால் ஒரு நாளுக்கு ரூபாய் 100 முதல் அதிகபட்சமாக ரூபாய் 1000 வரை இழப்பீடாக பெறலாம்.
3. மின் அழுத்த மாறுபாடுகள் மற்றும் அதன் மீதான புகார்கள் கவனிக்கப்படவில்லையென்றால் ரூபாய் 250யை இழப்பீடாக பெறலாம்.
4.நுகர்வோரின் புகார்கள் கவனிக்கப்படவில்லையென்றால் , ஒரு நாளைக்கு ரூபாய் 25 முதல் அதிகபட்சம் ரூபாய் 250 வரை மின் நுகர்வோர்கள் இழப்பீடாக பெறலாம்.
மின் இணைப்பை இணையதள வழியில் விண்ணப்பிப்பது எப்படி ?
தமிழநாடு அரசு மின்சார வாரியம் எளிதாக பொதுமக்கள் மின் இணைப்பை பெறும் வகையில் இணையதள மின் இணைப்பு தொடர்பாக விண்ணப்பிக்க புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான இணைய தள முகவரி (Tamilnadu Generation and Distribution Corporation Limited ) : http://www.tangedco.gov.in/ ஆகும் .மின் இணைப்பு தொடர்பான நுகர்வோர்கள் தங்கள் புகாரை இணையதளம் மூலம் அனுப்பலாம். இதற்கான இணையதள முகவரி : https://www.tnebnet.org/awp/login ஆகும். மேலும் இதே இணையதளத்தைப் பயன்படுத்தி "Mobile Number யை" பதிவு செய்யலாம் மற்றும் மின் கட்டணத்தை செலுத்தலாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பில் மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான செயலி (TANGEDCO) ஆகும். இதை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் தங்கள் மின் இணைப்பு எந்த வகை சார்ந்தது என்பதை இதே இணையதளம் மூலம் அறியலாம்.
பி . சந்தோஷ் , சேலம் .