திருப்பத்தூரில் தனியார் பள்ளி ஒன்றில் சிறுத்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சிறுத்தையின் தாக்குதலில் முதியவர் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலேயே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள அந்தப் பள்ளியில் சிறுத்தை பள்ளிக்குள் புகுந்துள்ளது. எப்படி சிறுத்தை பள்ளிக்குள் புகுந்தது என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுத்தையை நேரில் பார்த்து உறுதிசெய்த வனத்துறையினர் வழக்கத்தை விட பெரிய சிறுத்தையாக இருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளனர்.
இதனால் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளி அறையிலேயே வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிறுத்தையைப் பிடிக்கும் பணியைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் சிறுத்தைத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த முதியவர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் தற்போதைய தகவலாக பள்ளி வளாகத்தில் இருந்த சிறுத்தை தற்பொழுது கார் செட் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளது. வனப்பகுதிகளைச் சுற்றிலும் இல்லாத நகர் பகுதியில் சிறுத்தை எவ்வாறு வந்தது என்பது பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி. இருக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை அளவில் மிக பெரிதாக இருப்பதால் வலை வீசி பிடிப்பது கடினம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வேறு எந்த வழியில் சிறுத்தையைப் பிடிக்கலாம் என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூரில் சிறுத்தை புகுவது இதுவே முதன்முறை என அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.