Skip to main content

“வெளிநாட்டு கல்லூரிகளுக்கு நிகராக கூட்டுறவு கல்லூரி நுழைவு வாயில் உள்ளது” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 21/01/2025 | Edited on 21/01/2025
We have brought this college educate poor students Minister I. Periyasamy

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக 1989ம்  ஆண்டு போட்டியிட்ட ஐ.பெரியசாமி இன்று வரை (2023) ஒரே  தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். வீட்டு வசதி துறை, சிறைத்துறை, மற்றும்  வருவாய்துறை, பத்திரப்பதிவு துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக பொறுப்பில் இருந்த  ஐ.பெரியசாமி 2021ம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக  சட்டமன்ற வரலாற்றிலே யாரும் பெறாத அளவிற்கு 1லட்சத்து 35 ஆயிரத்தி 571  வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.  அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில்  கூட்டுறவு மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக பதவி ஒதுக்கீடு  செய்யப்பட்டது.

கூட்டுறவுத் துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம்  ஒன்றியத்தில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நலன் கருதி  எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக கிராம புறங்களில் உள்ள நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தி மேல்நிலைப் பள்ளிகளாக கொண்டு வந்தார். இதன் மூலம் பள்ளி படிப்பு படிக்கும்  மாணவர்களின் தரம் உயர்ந்தது. அதன்பின்னர் ஆத்தூர் தொகுதியில் வசிக்கும்  மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்பதற்காக திண்டுக்கல்,  நிலக்கோட்டை, பழனி செல்வதை  அறிந்த கூட்டுறவு துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி தமிழகத்தில் முதன்முறையாக கூட்டுறவு துறை சார்பாக  கூட்டுறவுத் துறை கலை மற்றும அறிவியல் கல்லூரியை சீவல்சரகு  ஊராட்சிக்குட்பட்ட சுதனாகியபுரத்தில் கொண்டுவந்தார். இது போல அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரியை ரெட்டியார் சத்திரத்திற்கும் கொண்டு வந்தார்.  ஆத்தூர் ஒன்றியத்தில் கூட்டுறவு துறை சார்பாக ரூ.98 கோடி மதிப்பில் சுமார் 8  ஏக்கர் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கல்லூரி சென்னையில் உள்ள ஐ.டி.பார்க் போல் அமைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கல்லூரியில் நிர்வாக அலுவலகம்,  ஆசிரியர்கள் ஓய்வறை, மாணவர்களுக்கு 40 வகுப்பறைகள், கணினி லேப்,  பிரம்மாண்டமான நூலகம், வேதியியல், இயற்பியல், உயிரியலுக்கான  ஆய்வகங்கள், கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேர் அமரக்கூடிய மிகப்பிரம்மாண்டமான உள்ளரங்கம், மாணவர்கள் விளையாட சிறந்த  விளையாட்டு மைதானத்துடன் கட்டப்பட்டு வருகிறது. கட்டிட பணிகள் இரவு,  பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தவிர கல்லூரி தேசிய  நான்கு வழிச்சாலை பகுதியில் அமைந்திருப்பதால் பிரம்மாண்டமான நுழைவு  வாயில் சிறந்த கட்டிட கலைஞர்களை கொண்டு வெளிநாடுகள் மற்றும் தனியார்  கல்லூரிகளில் உள்ள நுழைவு வாயில் போல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

குறைவான கட்டணத்தில் தரமான கல்வியை கிராமப்புற மாணவர்களுக்கு  வழங்கவும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளில் இல்லாத அளவிற்கு அதிநவீன வசதியுடன் கல்லூரி அமைவதற்கு  அமைச்சர் ஐ.பெரியசாமி எடுத்து வரும் முயற்சிக்கு தொகுதி மக்கள் மத்தியில் நன்மதிப்பையும், பாராட்டையும்  பெற்றுள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேட்டபோது, “நான் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த போது  தமிழகத்திலே முதல் கூட்டுறவு துறை சார்பாக கலை மற்றும் அறிவியல்  கல்லூரியை கொண்டு வந்தேன். வெளிநாட்டு கல்லூரிகளுக்கு நிகராக திண்டுக்கல்  கூட்டுறவு கல்லூரி நுழைவு வாயில் உள்ளது. கல்லூரியை ஆத்தூர் ஒன்றியத்திற்கு கொண்டு   வந்த சீவல்சரகு ஊராட்சியில் அமைவதற்கு காரணம் அந்த ஊராட்சியை  சுற்றியுள்ள 8க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் மாணவர்கள் மிகவும்  ஏழ்மை நிலையில் உள்ளனர். ஒரு சில மாணவர்கள் காலையில் 4 மணிக்கு  எழுந்து பூப்பறிக்கும் வேலைக்கு சென்று விட்டு அதன்பின்பு பள்ளிக்கு செல்வதை  பார்த்திருக்கிறேன்.

இந்த கல்லூரியை (சீவல்சரகு ஊராட்சி) இப்பகுதியில் அமைத்தால்  இதனைச் சுற்றியுள்ள ஆத்தூர். வீரக்கல், வக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, என்.பஞ்சம்பட்டி, காந்தி கிராமம், அம்பாத்துரை, தொப்பம்பட்டி, செட்டியபட்டி, போடி காமன்வாடி, எஸ்.பாறைப்பட்டி, அக்கறைப்பட்டி, மற்றும் சி;ன்னாளபட்டி  பேரூராட்சி, சித்தையன்கோட்டை பேரூராட்சியை சேர்ந்த ஏழை மாணவர்கள்  மற்றும் கைத்தறி நெசவு தொழிலாளர்களின் பிள்ளைகள் பயன் பெறுவார்கள் என்ற அடிப்படையில் கல்லூரியை கொண்டுவந்துள்ளோம். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நவீன வசதியுடன் கூடிய அரசு கல்லூரியில் படிக்கிறோம்  என்பதை உணர்வார்கள். வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டிட  பணிகள் முடிவடைந்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொற்கரங்களால் திறக்கப்பட உள்ளது.வெளிமாவட்டம் மற்றும் வெளியூர்களிலிருந்து மாணவர்கள் அதிகளவில்  சேர்ந்தால் அவர்களுக்கு விடுதி வசதியும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது” என்றார். 

சார்ந்த செய்திகள்