யூ டியூப் பார்த்து சொந்தக்காலில் நிற்கப்போவதாக வீட்டை விட்டு வெளியேறிய 10ம் வகுப்பு பள்ளி மாணவனை கூகுள் பே மூலம் இருப்பிடத்தை அறிந்த போலீசார் அவரை அழைத்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பகுதியில் படித்து வருகிறார். பள்ளிக்கு சென்ற தனது மகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் சிறுவன் தனது தொலைபேசியை பயன்படுத்தாமல் தனது தந்தையின் சிம் கார்டை வைத்து ஜிபே மூலம் மூன்று முறை பணம் பரிமாற்றம் செய்திருந்தது தெரிய வந்தது. பணம் அனுப்பிய எண்ணை தொடர்பு கொண்டு சிறுவன் இருப்பிடத்தையும் கண்டுபிடித்தனர். சிறுவனை பிடித்து விசாரித்ததில் செல்போன் பயன்படுத்தும் போது பெற்றொர் கடன் வாங்கி படிக்க வைப்பதாக சொல்லிக்காட்டியதாகவும் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என நினைத்து சொந்தக் காலில் நிற்பது எப்படி என யூ டியூபில் வீடியோ பார்த்து ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ளலாம் என நினைத்து அப்பாவின் சிம் கார்டை எடுத்துகொண்டு வந்ததாகவும் வெளி மாநிலத்திற்கு செல்ல இருக்கும் பொழுது காவல் துறையினர் பிடித்துவிட்டனர் எனவும் கூறியுள்ளார். இதன் பின் மாணவருக்கு அறிவுரை கூறி அவரை பெற்றோருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.