வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்!
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் திருப்பூர் மாவட்ட சாய, சலவை தொழிற்சாலைகள், தனி மற்றும் பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், பொதுநல அமைப்பினருடனான கலந்தாலோசனை கூட்டம் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கிப் பேசினார். திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், கரைபுதூர் ஏ.நடராஜன் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா இராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நொய்யலில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை பயன்படுத்தி சாய ஆலைகளில் இருந்து சாயக்கழிவுகளை திறந்து விடுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற பிரச்சினைகள் இருந்து வந்தது. ஆனால், தற்போது தமிழக அரசால் வழங்கப்பட்ட நிதி உதவிகள், கடன் திட்டங்கள் மூலம் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது. இதனால் தற்போது சாய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒருசில நபர்கள் தொழில் நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நொய்யலில் சாயக்கழிவுகளை திறந்து விடுகின்றனர்.
அந்த குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தொழில்துறைக்கு முழு ஒத்துழைப்பை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் நொய்யலில் அதிக அளவில் நுரை காணப்பட்டதால் இது சாயக்கழிவால் ஏற்பட்டது என்று புகார்கள் எழுந்தது.
ஆனால், இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கோவை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளாலேயே நோயால் அற்று நீரில் நுரை ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளின் தேவைகள் எதுவாக இருந்தாலும் அரசு அதை நிவர்த்தி செய்யும். திருப்பூர் உலக அளவில் புகழ் பெற்று விளங்கும் நகரமாக இருந்து வருகிறது. இதன் வளர்ச்சி மேலும் உயர வேண்டும்.
திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்கு செல்வதாக தொடர்ந்து தகவல் பரவிவருகின்றன. ஆனால் இதிலும் எந்த வித உண்மையும் இல்லை. தமிழகத்தில் மட்டுமே தொழிலை பாதுகாப்புடன் செய்ய முடியும். வேறு எந்த மாநிலத்திலும் தொழில் பாதுகாப்பு இல்லை. இங்கு தான் தொழிலுக்கு பல சலுகைகளும் அரசு கொடுத்து வருகிறது...” என்றார்.
- சிவசுப்பிரமணியம்