கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரில் பிரியாணி கடை வைத்திருக்கும் கண்ணன் கடந்த 26 ஆம் தேதி கடை வியாபாரத்தை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் கண்ணனை சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்தது. இதனால் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதபமாக உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கண்ணனின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிவு செய்து கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு உதவி ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில் கண்ணனை கொலை செய்த மர்ம கும்பல் நெய்வேலி புதிய அனல் மின் நிலைய பகுதிகளில் உள்ள முந்திரி காட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து முத்திரி காட்டிற்கு விரைந்த போலீசை பார்த்தவுடன் தலைமறைவாக இருந்த கும்பல் தப்பியோட முயன்றுள்ளது. அவர்களை சுற்றி வளைத்த போலீசார் 3 பேரை கைது செய்த நிலையில், 2 பேர் அருகே இருந்த மதில் மீது ஏறி தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்ததில் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 5 பேரும் கைது செய்யப்பட்டு, காயமடைந்த இருவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதான 5 பேரும், குளம் கிராமத்தைச் சேர்ந்த எழில் நிலவன், ஆகாஷ் என்கிற டெக்லஸ், நெய்வேலி 27 வது வட்டத்தைச் சேர்ந்த சதீஷ், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சல்மான்கான், நெய்வேலியைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “வெளியூரைச் சேர்ந்த கண்ணன் எங்கள் ஊர் பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார். அவரது கடைக்கு சாப்பிட சென்ற நாங்கள் கண்ணனிடம் கடனுக்கு பிரியாணி கேட்டோம். ஆனால் அவர் உங்களுக்கு கடன் தர முடியாது என கராராக தெரிவித்தார். மேலும் எங்கள் மீது தெர்மல் போலீசில் புகார் அளித்தார் அந்தப் புகாரின் பேரில் எங்களது நண்பர் விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் இருக்கும் நண்பரை பார்ப்பதற்காக கடலூர் மத்திய சிறைக்கு சென்றோம், அப்போது விக்னேஷ் எங்களிடம் வெளியூரிலிருந்து வந்து நம்ம பகுதியில் பிரியாணி கடை வைத்து பிழைபபு நடத்தி வரும் கண்ணன் உள்ளூர் காரர்களான எங்களுக்கு கடன் கொடுக்க மறுத்ததோடு போலீசில் புகார் அளித்து சிறைக்கும் அனுப்பி உள்ளார். சும்மா விடக்கூடாது அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று சிறை சந்திப்பின் போதே திட்டம் தீட்டினோம், அதன்படி கண்ணன் தினசரி கடை வியாபாரத்தை முடித்து வீட்டுக்குச் செல்லும் வழியை கண்காணித்து வந்தோம். நேற்று கடை வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது வழிமறித்து வெட்டி கொலை செய்தோம் என்று வாக்குமூலம் அளித்தனர். அதன்படி ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.