செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் சத்துணவு தர உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, காலாவதியான, தரமற்ற பொருட்களை சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது. அங்கன்வாடி பணியாளர்கள் விரல் நகங்களில் நகப்பூச்சு, செயற்கை நகங்கள் ஏதும் பயன்படுத்தக் கூடாது. மூக்கு சொறிதல், தலை கோதுதல், கண்கள் - காது - வாயினை தேய்த்தல், எச்சில் துப்புதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அங்கன்வாடி மையம் வரும் இரண்டு வயது முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.