Skip to main content

பெரும்பான்மையை இழந்துள்ள குதிரை பேர அரசு தானாகவே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Published on 08/09/2017 | Edited on 08/09/2017
பெரும்பான்மையை இழந்துள்ள குதிரை பேர அரசு தானாகவே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் 
 


- திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  இன்று (07-09-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
 
செய்தியாளர்: திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க செப்டம்பர் 14-ந் தேதி தடைவிதித்து நீதிமன்றம் உத்திரவிட்டுள்ள நிலையில், அதற்குள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வாய்ப்புள்ளதா?
 
மு.க.ஸ்டாலின்: எடப்பாடி தலைமையிலான ‘குதிரை பேர’ ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டு இருப்பது இந்த நாட்டுக்கே நன்றாகத் தெரியும். எனவே, குறுக்கு வழியில் திட்டங்களைத் தீட்டி, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, பல முயற்சிகளை அவர்கள் எடுத்து வருகிறார்கள். அதில் ஒரு முயற்சிதான் உரிமைக்குழுவைக் கூட்டியது. உரிமைக்குழுவைக் கூட்டுவதற்கே இந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை இருந்தால் தான் உரிமைக்குழுவுக்கே பெருமை. எனவே, ஆட்சி நடத்தவும் பெரும்பான்மை இல்லாமல், உரிமைக்குழுவிலும் பெரும்பான்மை இல்லாமல் தான் அவர்கள் இருக்கிறார்கள்.
 
எனவே, அவர்கள் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதே தவறு என்பதால் நீதிமன்றத்தை அணுகினோம். ஜனநாயகத்தைக் காப்பாற்றும் வகையில் நீதிமன்றத்தின் தடையுத்தரவு வந்திருப்பதை உள்ளபடியே வரவேற்கிறோம். மகிழ்ச்சியடைகிறோம். எனவே, இதன் பிறகாவது மெஜாரிட்டியை இழந்து விட்டுள்ள இந்த ஆட்சி, அவர்களாகவே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக இருக்கும் மாண்புமிகு வித்யாசாகர் ராவ் அவர்கள், இந்த அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும் வகையில் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டுகின்ற முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறேன்.
 
செய்தியாளர்: முதல்வர் எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் வாங்கியிருக்கிறார்களே?
 
மு.க.ஸ்டாலின்: ஏற்கனவே 19 பேர் வாபஸ் பெற்று விட்டனர். இப்போது 3 பேர் வாபஸ் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆக மொத்தம் 22 பேர் வாபஸ் பெற்றுள்ளார்கள் என்று செய்திகள் மூலமாக அறிந்து கொண்டேன். அவர்கள் யார் யார், அவர்களுக்கு எவ்வளவு கொடுத்தார்கள், என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
 
செய்தியாளர்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் கால தாமதம் ஏற்படுவதால், இப்போது ஜக்கையன் எம்.எல்.ஏ. முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறாரே?
 
மு.க.ஸ்டாலின்: அவர் இப்போது முதல்வருக்கு ஆதரவு தந்திருக்கிறார். மாலையில் அதை மாற்றிக் கொண்டு வாபஸ் பெறுவார். இதுபற்றி எல்லாம் யாரும் எதுவும் சொல்ல முடியாது.
 
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்