தலைமைச் செயலக தமிழ் மன்றத்தின் ஆண்டுவிழா 19.5.2019 அன்று சென்னை அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெற்றது. குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் திரு.ம.சு. சண்முகம் இ.ஆ.ப. , நிதித் துறை சிறப்புச் செயலாளர் திரு ஆனந்தகுமார் இ.ஆ.ப, அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர் செல்வி கவிதா இ.ஆ.ப ஆகியோர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தனர். காவல் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் கவிஞர் மணி முகம் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற கவிஞர் வதிலை பிரபா, திரைப்பட பாடலாசிரியர் அருண் பாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளரும் கல்கி இதழின் துணைத் தலைமை ஆசிரியருமான அமிர்தம் சூர்யா பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக விழாவில் தலைமைச் செயலக அலுவலர்களின் படைப்புகள் இடம் பெற்ற ஆண்டு மலரினை திரு.ம.சு சண்முகம் இ.ஆ.ப வெளியிட சிறப்பு விருந்தினர்கள் மரு.இரா.ஆனந்தகுமார்,இ.ஆ.ப, செல்வி.கவிதா ராமு,இ.ஆ.ப., மற்றும் கல்கி இதழின் துணைத் தலைமை ஆசிரியர் திரு.அமிர்தம் சூர்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவிஞர்களுக்கு வளர்தமிழ் விருது, ழகரம் விருது, குறிஞ்சி விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் கவி உலகில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் கவிஞர்கள் வதிலை பிரபா, மணி சண்முகம், கோகிலன், பிறை நிலா, வணவை தூரிகா, இரண்டாம் நக்கீரன் ஆகிய கவிஞர்களுக்கு தலைமைச் செயலகத் தமிழ்மன்ற கவிஞரேறு 2019 விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தமிழ்க் கவிதைகளில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் கவிஞர் மதிபாலா அவர்களுக்கு நூற்றாண்டுக் கவிஞர் விருது வழங்கப்பட்டது. விழாவில் தலைமைச் செயலக அலுவலர்கள் மட்டும் பங்கு பெற்ற பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவை நடைபெற்றன. சேலம் பழனி குழுவினரின் ஆதி மேளம் நிகழ்ச்சியும், தேவாமிர்தம் குழுவின் சிறுதானிய மதிய உணவும் நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமைச் செயலக தமிழ் மன்றத் தலைவர் திரு மு.ச. சதீஷ்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.