அமெரிக்கா வாழ் தமிழர்கள் (குளோபல் தமிழ் டயஸ்போரா) ஸ்டெர்லைட், காவிரி பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்காக மிகப்பெரிய அமைதிப் பேரணி உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்திவருகிறது. அது மட்டுமல்லாமல் குமரெட்டியாபுரம் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து கள நிலவரத்தையும் கேட்டு அறிந்து அதற்கேற்ப செயலாற்றி வருகின்றனர். பல வழிகளிலும் பங்காற்றிவருகின்றனர்.
![american tamil](http://image.nakkheeran.in/cdn/farfuture/jCDgJnBeG7ULYHNhSm7PHl_I5tpye84f0FgBTvruhVo/1533347688/sites/default/files/inline-images/walkathon%20sterlite%202.jpg)
அதில் ஒரு பகுதியாக ஸ்டெர்லைட் ஆலை குறித்த சில தகவல்கள் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு போடப்பட்டது. ஓய்வு பெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் மற்றும் எட்டு பேர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். ஆரம்பத்திலிருந்தே இதற்கு பதிலளிக்காமல் தவிர்த்து வந்தது அரசு. கடந்த ஏப்ரல் 13ம் தேதி இந்தக் கோரிக்கையை பதிவு செய்து மே 4ம் தேதிக்குள் பதிலளிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். "விவரம் தெரிய ரூ.1200 செலுத்தவேண்டும் என பதில் வந்தது. அதைத் தொடர்ந்து ரூ.1200 ம் செலுத்தப்பட்டது. அதன்பின் இந்தத் தகவல்கள் சட்ட அமைப்புகளால் சரிபார்க்கப்பட வேண்டியிருக்கிறது என்று கூறினர். ஆனால், நாங்கள் கேட்ட தகவல்களைத் தராமல் தட்டிக் கழிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. தகவல் அதிகாரிகள் அரசாலும் கார்ப்பரேட்களாலும் இயக்கப்படுகின்றனர்" என்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதி நம்மிடம் தெரிவித்தார்.
அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுத்தால், அது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்கை வலுவாக்குமென்பதாலும், போராட்டங்களுக்கு உதவலாம் என்பதாலுமே தகவல் தருவதை தள்ளிப் போடுவதாகக் கூறுகின்றனர். இதையெல்லாம் பார்க்கும்பொழுது இந்த அரசு செயல்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்காகவா அல்லது பாதிப்பை ஏற்படுத்திய ஸ்டெர்லைட்க்காகவா என்ற சந்தேகம் எழவில்லை, தெளிவாகிறது.