அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மற்றும் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்களின் முடிவை விரைந்து அறிவிக்கக் கோரி, அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர், கடந்த ஜனவரி மாதம் 3- ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் முடிவுகளை விரைந்து வெளியிடக்கோரும் நோக்கில், அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், இந்தப் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியதாகவும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் நகர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் எடுத்துரைத்தார்.இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைக்கு வரும் டிசம்பர் 18- ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, அன்றைய தினம் வழக்கு குறித்து அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
தண்டனைக்கு தகுதியான வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், முகாந்திரமற்ற விஷயங்களில் வழக்கு பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டுமெனவும், காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.