வாணியம்பாடியில் பழிக்கு பழி சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் போலீசார் முறையாக விசாரித்து தீர்வுகாண வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் திம்மாம்பேட்டை அடுத்த பாட்டூர் பகுதியைச் சேர்ந்த கேட்டரிங் தொழிலாளி இளைஞர் அண்ணாமலை (20) என்பவர் நண்பராக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிறுமியின் பெற்றோர் அண்ணாமலை சிறுமியிடம் பேசக்கூடாது என்று எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
அண்மையில் சிறுமியின் தந்தை சக்திவேல் மற்றும் தாய்மாமன் விஜயகுமார் ஆகியோர் கேட்டரிங் பணி உள்ளதாகக் கூறி செல்போன் மூலம் அழைப்பு விடுத்து ராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள ஒரு குடோனிற்கு இளைஞர் அண்ணாமலையை வரவழைத்து குடோனில் அடைத்து வைத்து சக்திவேல் மற்றும் விஜயகுமார் உள்ளிட்ட சிலர் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது இளைஞர் அண்ணாமலை மயங்கிய நிலையில் இரண்டு முறை தண்ணீர் தெளித்து மீண்டும் மீண்டும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் காலணியாலும் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த இளைஞர் அண்ணாமலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆம்பூர் காவல்துறையினர் இளைஞரை தாக்கிய சிறுமியின் தந்தை சக்திவேல் மற்றும் அவரது தாய்மாமன் விஜயகுமார் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மாற்று சமூகத்தினரால் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராமநாய்க்கான்பேட்டை பகுதியில் வீட்டில் சிறுமி மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் தனியாக இருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் வீட்டில் புகுந்து கத்தியால் சிறுமியின் கழுத்து மற்றும் கை பகுதியில் தாக்கியுள்ளனர். தடுக்க சென்ற சிறுமியின் தாய் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைப் பார்த்த அவரது உறவினர்கள் சிறுமி மற்றும் தாய் ஆகிய 2 பேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் தன் மகளிடம் பழகியதால் கணவர் சக்திவேல் அந்த இளைஞரை தாக்கியதாகவும், அதற்கு பழிவாங்க அண்ணாமலை 3 பேருடன் வீட்டில் புகுந்து இருவரையும் கத்தியால் தாக்கியதாக சிறுமியின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு பிரிவினர்கள் மாறி மாறி தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வருவதால் அங்கு மிகப்பெரிய சாதிய மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதை உடனடியாக காவல்துறை சரியாக விசாரணை செய்து தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.