நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளர் எம்.ஜோதிராமன் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உட்பட்ட விளவங்கோடு தொகுதியின் இடைத்தேர்தல் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர் நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு அமர்வுகளுக்கும் விடுமுறை நாள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.