புதுச்சேரியில் போலி மதுபானம் மற்றும் எரிசாராயம் கடத்துவதாக கிடைத்த தகவலின் பெயரில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் வட்டாட்சியர் சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் தொழிற்பயிற்சி மையம் (ஐ.டி.ஐ) எதிரே கனரக வாகனம் நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் சில நாட்களாக கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து அந்த வண்டி எண்ணின் உரிமையாளரிடம் தொலைபேசியில் விசாரித்ததில் அவரது வண்டி விசாகப்பட்டினத்தில் இருப்பதாக தெரிவித்தார். அந்த வாகனம் விசாகப்பட்டினத்தில் இருப்பதை உறுதி செய்த பின் அந்த வண்டியின் பதிவு எண் போலி என்பது தெரிய வந்தது. எனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியின் பூட்டை உடைத்து பார்த்ததில் வண்டியின் உட்பகுதியில் பல்வேறு கலர்களில் பிளாஸ்டிக் ட்ரேக்கள் இருந்தன. அதன் பின் பகுதியில் இருந்த ரகசிய அறையை உடைத்து சோதனை செய்தபோது 3 வெள்ளை நிற கேன்களில் 15 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அவை உடனடியாக கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக கலால் விதிகளின்படி வழக்குப் பதிவு செய்து வண்டி உரிமையாளர் மற்றும் பதுக்கல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட எரிசாராயம் மற்றும் கண்டெய்னர் லாரியின் மொத்த மதிப்பு ரூபாய் 13 லட்சம் ஆகும். இது குறித்து கலால் துறை துணை ஆணையர் குமரன் கூறுகையில், "புதுச்சேரியில் சமூக வலைத்தளங்களில் மதுபான விற்பனை சலுகைகள் குறித்து விளம்பரப்படுத்தக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வாரம் புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் விதிகளை மீறி இயங்கி வந்த ஏழு ரெஸ்ட்ரோ பார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரெஸ்ட்ரோ பார்களை கண்காணித்து வருகிறோம். விதிகளை மீறினால் மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.