நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
ஏற்கெனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்த பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''நான் வந்து சும்மா ஓட்டு கேட்டு விட்டுப் போகின்ற ஆளில்லை. உங்கள் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என நினைக்கிற ஆள். அதனால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒருவேளை நான் சரியா செய்யவில்லை என்றால் என்னிடம் கேள்வி கேளுங்கள். என்னை அடிக்கக் கூட செய்யுங்கள். கல்லை எடுத்துக்கூட தூக்கி என்னை அடியுங்கள்'' எனப் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.