அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 35 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காலை முதலே மக்கள் மெரினாவில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் கூடி நினைவஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். முதலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார். இதன் பின் ஈபிஎஸ் தரப்பின் சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதன் பின் ஓபிஎஸ் தரப்பும் தனியாக உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து, சசிகலாவும் அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் எம்ஜிஆரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்விற்கு வந்திருந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “எங்கள் தலைமையில்தான் கூட்டணி இருக்கும். நாங்கள் பார்த்து ஒதுக்குகின்ற இடம்தான். எங்களை யாரும் வற்புறுத்த முடியாது. கடந்த தேர்தலிலும் சமூகமாகப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் பங்கு பெற்றது என்பது ஊர் அறிந்து வரலாறு. கட்சியிலும் சரி, கூட்டணியிலும் சரி சசிகலா, டி.டி.வி.தினகரன் யாரையும் சேர்த்துக் கொள்வதாக இல்லை.
இந்த ஆட்சி மீது கடுமையான அதிருப்தி இருக்கிறது. நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பொங்கல் பரிசு 5,000 ரூபாய் கொடுத்திருக்கலாம் என்று சொன்னார்கள். நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் போனா போகட்டும்னு ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்காங்க. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என தடுத்தவர்களை அவரின் ஆத்மா சும்மா விடாது. அப்படி சிகிச்சை பெற்று மீண்டும் வந்திருந்தால் இப்பொழுது ஜெயலலிதாவின் ஆட்சி இருந்திருக்கும். இந்த மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் எங்களுடைய ஒரே எதிர்பார்ப்பு. ஜெயலலிதாவின் ஆத்மா அவர்களைச் சும்மா விடாது. அவர் உங்களைத் தூங்கவிடாமல் பண்ணும் நிச்சயமாக'' என்றார்.