திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுளம் கிராமத்தின் ஏரிக்கரையோரம் வாத்து மேய்ச்சலுக்கு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பெரியஉனை கிராமத்தைச் சேர்ந்த மேகநாதன் ஓட்டி வந்துள்ளார். வாத்து மேய்க்க அதே ஊரைச்சேர்ந்த புலிவேந்தர் என்பவரை கூலிக்கு அழைத்து வந்துள்ளார். கடந்த ஒருமாதமாக இங்கேயே இருந்து வாத்துக்களை மேய்த்துள்ளனர்.
இந்நிலையில் மேகநாதன் வாத்துகளை ஏற்றிச்செல்ல ஊரிலிருந்து தனது லாரியை எடுத்துவரச் சொல்லியுள்ளார். லாரியும் புறப்பட்டு வந்துள்ளது. அந்த லாரியை ஓட்டுநர் ஷரிஷ் மது போதையில் ஒட்டி வரும்போது காஞ்சி அருகே அரசு பேருந்து மீது மோதியது. இதுப்பற்றி அரசு பேருந்து ஓட்டுநர் தந்த புகாரின் அடிப்படையில் கடலாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
விபத்துக்கான அபராதம், லாரியை விடுவிக்க லஞ்சம் என 40 ஆயிரம் போலீஸ் வாங்கியுள்ளது எனக் கூறப்படுகிறது. “அந்தப்பணத்தினை நீ தான் தரவேண்டும், நீ அழைச்சித் தானே வாத்து ஏற்றிப்போக வந்தேன்..” என ஹரிஷ் மேகநாதனிடம் சொல்லியுள்ளார். பதிலுக்கு, “நீ குடிச்சிட்டு வண்டி ஓட்டிக்கிட்டு வந்து ஆக்சிடண்ட் செய்தால், நான் பணம் கட்டணுமா.” எனக்கேட்க இதுவே இருவருக்கும் தகராறு ஆகியுள்ளது. லாரியின் உரிமையாளர் மேகநாதன் என்பதால் அபராதம் செலுத்தி விட்டு வாகனத்தையும் ஹரிஷையும் மீட்டு வந்துள்ளார்.
கொட்டக்குளம் வந்ததும் லாரியின் உரிமையாளர் மேகநாதன் மற்றும் புலி வேந்தன் ஆகிய இருவரும் அபராதத் தொகை கட்டிய ஆத்திரத்தில் ஹரிஷின் கைகளை கட்டிவிட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். “அய்யோ.. மாமா... விட்டுடுங்க..” என கதறியதை தொடர்ந்து கட்டு அவிழ்த்து விட்டு ஹரிஷ்சை இரவு அங்கேயே தூங்க வைத்துள்ளனர்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ஹரிஷ் இறந்துப்போய் இருந்துள்ளார். அதற்காக இருவரும் அலட்டிக்கொள்ளவில்லை. உடலை அப்படியே வைத்துவிட்டு வாத்துக்களை மேய்க்க ஓட்டிச்சென்றனர் மேகநாதனும், புலிவேந்தனும். தோக்கவாடி அருகேயுள்ள செய்யாற்றங் கரையோரம் ஹரிஷ்சை புதைக்க பள்ளம் தோண்டி வைத்துவிட்டு மாலை வாத்தை ஓட்டிவந்து பட்டியில் அடைத்துனர். அதன்பின் சாப்பிட்டுவிட்டு கொலை செய்யப்பட்ட ஹரிஷ் உடலை லாரியில் வைத்து எடுத்துச்சென்று காலையில் தோண்டிய பள்ளத்தில் போட்டு புதைத்துவிட்டு வந்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து 10 நாட்களாகியும் மகனிடமிருந்து எந்த போனும் வரதாதால் அவரது வளர்ப்பு தந்தை பாஸ்கரன் பதறியுள்ளார். இந்நிலையில் பாஸ்கரனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஹரிஷ் தாக்கப்படும் வீடியோ ஒன்றை ஒருவர் அனுப்பி வைத்துள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இருவரையும் அழைத்து விசாரித்த போது ஹரிஷை அடித்து கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். “குடித்துவிட்டு வண்டி ஓட்டி ரூ.40,000 நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அவனை அடித்து உதைத்த போது, அவன் கெஞ்சி கதறியதை கேட்கும் போது ஆனந்தமாக இருந்தது. எங்களின் கெத்தைக்காட்ட அதை வீடியோ எடுத்து எங்களது நண்பர்களுக்கு அனுப்பினோம். இது இரவே நடந்தது, ஆனால் காலையில் பார்த்தால் அவன் இறந்து கிடந்தான்” என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.