சிதம்பரம் அருகே பி.முட்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் வேணுகோபால் மகன் சீனு என்கின்ற ராமதாஸ் (52). இவர் இந்து முன்னணி ஆதரவாளர். (செப்.29) அதிகாலை 3.30 மணிக்கு இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். இதில் அவரது வீட்டு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனம் மற்றும் வீட்டின் முன்பு இருந்த தென்னை மரத்தின் மீதும் பெட்ரோல் குண்டு விழுந்து எரிந்து காரின் முன் பகுதியில் புகை படிந்துள்ளது. வேறொரு பெட்ரோல் வெடிகுண்டு தென்னை மரத்தின்மீது அடித்து கீழே விழுந்து எரிந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்த கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன், டி.எஸ்.பி. எஸ்.ரமேஷ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ராமதாஸ் தீவிர ஆஞ்சநேயர் பக்தர் ஆவார். இவர் பி.முட்லூர் - கடலூர் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் வைத்து நடத்தி வருகிறார். மேலும் இவர் அதே பகுதியில் 100 அடி உயர ஆஞ்சநேயர் சிலை கட்டுவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார். இவர் ஒவ்வொரு ஆண்டும் சென்னை மார்க்கத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த 4-ந் தேதி மண்ணெண்னை பாட்டில் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகிறார்.