தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை பலர் ஆக்கிரமித்திருப்பதை கண்டறிந்து அவற்றையெல்லாம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னனி வேண்டுகோள் வைத்துள்ளது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் மக்கள் வந்து தங்களது கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.அப்போது ஈரோடு இந்து முன்னணி சார்பில் ஜெகதீஷ் என்பவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையான கோவில்கள் உள்ளன. மாநிலம் முழுக்க இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஆயிரக்கணக்கான கோவில்களும் அதற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலங்களும் உள்ளன. இந்த நிலங்களை பல்வேறு நபர்கள், அரசியல் கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். வாடகைக்கு இருக்கும் சிலர் முறையாக குத்தகை பணமும் கொடுப்பதில்லை. மேலும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தனியாருக்கு பட்டா போட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1480 கோவில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான பல நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை முறையாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் நிலத்தை பட்டா போட்டு கொடுப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும்." என கூறியிருந்தனர்.
வித்தியாசமாக செய்தால்தான் விளம்பரம் ஆகும் என்ற நவீனத்தின்படி மனு கொடுக்க வந்த நிர்வாகிகளில் ஒருவர் சந்தன கருப்பு ராயன் சாமி வேடத்தில் வந்தார்.