Skip to main content

டிஎன்பிஎஸ்சியில் பெரியாருக்கு எதிரிகள் இருக்கிறார்களா?

Published on 12/11/2018 | Edited on 12/11/2018

தனது வாழ்நாளெல்லாம் சாதி ஒழிப்புப் போராளியாக வாழ்ந்து மறைந்த தந்தை பெரியாரை, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் இடம்பெற்ற ஒரு கேள்வியில் ஈ.வெ.ராமாசாமி நாயக்கர் என்று சாதிப்பெயருடன் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 

pp

 

 

இது தற்செயலாக நிகழ்ந்ததாக யாரும் கருதிவிட முடியாது. திட்டமிட்டே இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.


 

ஒரு காலத்தில் பிறக்கிற குழந்தைக்கு பெயர் வைக்கும்போதே சாதி என்ற வாலும் சேர்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும். அப்படித்தான் தந்தை பெரியாரின் இயற்பெயர் எனும்போதே ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆக இருந்தது. 1929 ஆம் ஆண்டு அவரே தனது பெயருக்கு பின் ஒட்டியிருந்த நாயக்கர் என்ற சாதிப்பெயரை வெட்டி எறிவதாக அறிவித்தார்.


 

அவர் மட்டுமல்ல, தியாகராய செட்டியார் உள்ளிட்ட பெருந்தலைவர்களும் சாதிப்பெயரை நீக்குவதாக அறிவித்தார்கள். அப்போதிருந்து தமிழ்நாட்டில் சாதிப்பெயரை இணைத்து பள்ளிகளிலும், மற்ற பொது இடங்களிலும் பெயரை பதிவு செய்யும் பழக்கம் கேவலமாக பார்க்கப்பட்டது.


 

ஆனால், சாதி அமைப்பை, வர்ணாச்சிரம முறையை ஆதரித்த ராஜகோபாலாச்சாரியார், மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி ஆகிய தலவர்கள் பெரியாரின் இந்த தீர்மானத்துக்கு எதிராக இருந்தார்கள். உண்மை இப்படி இருக்கும்போது, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஒரு கேள்விக்குரிய பதில்களாக நான்கு பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார்கள்.


 

அதாவது, திருச்செங்கோட்டில் ஆசிரமம் அமைத்தவர் என்ற கேள்விக்கு, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ராஜாஜி, காந்திஜி, சி.என்.அண்ணாதுரை என்று நான்கு தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார்கள்.


 

இந்த வினாவைத் தயாரித்தவரின் நோக்கம் என்ன தெரியுமா? ராஜகோபாலாச்சாரி என்று கடைசிவரை கையெழுத்துப்போட்டவரை ராஜாஜி என்றும், மோகன்தாஸ் காந்தி என்று கையெழுத்திட்டவரை காந்திஜி என்று மக்களுக்கு அறிந்த பெயர்களால் குறிப்பிடுகிறார். அதேசமயம், தானே வெட்டி எறிந்த சாதிப் பெயரை இணைத்து தந்தை பெரியார் என்று மக்களால் அழைக்கப்படுகிறவரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றும், அறிஞர் அண்ணா என்று மக்களால் அழைக்கப்படுகிறவரை சி.என்.அண்ணாதுரை என்றும் குறிப்பிடுவதன் மூலம் அவர்களை சிறுமைப்படுத்த மறைமுகமாக முயன்றிருக்கிறார்.


 

தமிழக அரசில் இத்தகைய கருப்பாடுகளின் நோக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பொறுப்புகளில் திணிக்கப்பட்டுள்ள இத்தகைய விஷ எண்ணம் கொண்ட அதிகாரிகளை களையெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்