தமிழகம், பஞ்சாப், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; அலுவலகத்தில் கட்டாயம் சானிடைசர் வைக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் அவ்வப்போது சோப்பு அல்லது கிருமிநாசினியைப் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று (22/03/2021) பிறப்பித்துள்ள உத்தரவில், "உயர்கல்விப் படிப்புகளுக்கு செயல்முறை வகுப்புகளை மார்ச் 31- ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடைபெறும். நாளை (23/03/2021) முதல் ஆறு நாட்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். கரோனா தொற்று அதிகரிப்பு, மாணவர்கள் பாதுகாப்பு கருதி ஆன்லைன் முறையில் வகுப்பு நடைபெறும். அறிவியல், பொறியியல், பல வகை தொழில்நுட்பப் பிரிவ இறுதிப் பருவ மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்பு நடைபெறும். இறுதிப் பருவ மாணவர்களுக்கும் மார்ச் 31- ஆம் தேதிக்குள் ஆன்லைனில் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக் கடிதமானது, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தமிழக உயர்கல்வித்துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு, யுஜிசி ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டுள்ளது.