
வழக்கறிஞர் அலுவலகத்திற்கு பணிக்காகச் செல்லும் வழக்கறிஞர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதாகவும், இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி எனத் தெரிவிப்பதாகவும் கூறி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கலையரசி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டாலும், ஆன்லைன் மூலம் நீதிமன்றங்கள் செயல்பட்டுவரும் நிலையில், டெல்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில், நீதிமன்ற வழக்கு விசாரணை பணிகளுக்காக வழக்கறிஞர்கள் சென்றுவர அனுமதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்கறிஞர்கள் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்ல அனுமதி மறுப்பதால், நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யும் பணி பாதிக்கப்படுவதாகவும், ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்தாலும், கூடுதல் ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக வழங்க வேண்டியுள்ளதால், அலுவல் ரீதியாக செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிக்க உத்தரவிடவேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.