தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்து 2 மாதங்களில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்கும் வகையில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு நிர்வாக அதிகாரம் வழங்கி தமிழக பள்ளிக்கல்வி துறை கடந்த மே 18 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்த நிலையில் மாவட்ட அளவில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து தலைமை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்ட பதவிகளை மாற்றியமைக்கவும் இந்த அரசாணை வழிவகை செய்கிறது. அனைத்து பள்ளிகளையும் நிர்வகிக்கும் அதிகாரம் தலைமை கல்வி அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், கல்வியாளர்கள் அடங்கிய குழுவை உருவாக்கி பள்ளி கல்வி நிர்வாகம் குறித்து முடிவு எடுக்க உத்தரவிட கோரியும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் சங்கம் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி தண்டபாணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது " தனியார் பள்ளி மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் சார்பில், பள்ளிகளை நிர்வகிக்க ஏற்கனவே சட்டங்கள் உள்ள நிலையில் விதிகளை மீறி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணை சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, கல்வி தரத்தை மேம்படுத்தவும், பள்ளிகள் நிர்வாகத்தை கண்காணிக்கும் நோக்கிலேயே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிர்வாக வசதிக்காக, ஒரே மாதிரியான நடை முறையை மேற்கொள்ள இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டிருந்தாலும், அதில் உள்ள குறைகளை நிர்வத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் தமிழக அரசின் இந்த அரசாணையில் தலையிட மறுத்த நீதிபதிகள், அரசாணையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து 2 மாதங்களில் திருத்தப்பட்ட அரசாணையை வெளியிட வேண்டும் எனவும், மனுதாரர்கள் அரசிடம் குறைகளை தெரிவிக்கவும் நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.