வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அண்ணா நகர் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற நபர், சாலையில் ரோந்து பணியில் இருந்த வருவாய் துறையினரை பார்த்து அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை விட்டு தப்பி ஒடிவிட்டதாகவும், 120 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வாணியம்பாடி வருவாய்த்துறை அலுவலகத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறியுள்ளனர்.
.கடந்த வாரம், வாணியம்பாடி அண்ணாநகர் அருகில் உள்ள சோதனை சாவடி வழியாக ஆந்திரா மாநிலத்துக்கு பட்டப்பகலில் எந்த தடங்களும் இல்லாமல் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுகின்றன. அதனை தொடர்ந்து இரவு நேரத்தில் ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகின்றன. இதனை சோதனை சாவடியில் உள்ள காவலர்கள் தடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் முன்வைத்தனர்.
அதோடு, இதுப்பற்றி வருவாய்த்துறை, காவல்துறைக்கு தகவல் தந்தால் தகவல் சொன்னவர்களை காட்டி தந்து விடுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு தகவல் அனுப்பியிருந்தனர். அதனைப்பார்த்து அதிர்ச்சியான ஆட்சியர், இது தொடர்பாக வருவாய்த்துறையினரிடம் விசாரித்துள்ளார்.
இந்நிலையில் தான் அரிசி கடத்திய ஒரு வண்டியை பிடித்துள்ளோம் என்றும், 120 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் என்றும், ரேஷன் அரிசி கடத்தியவன் தப்பி சென்றுவிட்டான் என தகவல் வெளியிட்டுள்ளார்கள். உண்மையில் கடத்தல்காரன் தப்பி சென்றானா? அல்லது தப்பிக்க வைத்தார்களா? என்கிற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.