Skip to main content

உயர் வகுப்பினரின் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை பிற மாநிலங்களில் பயன்படுத்த முடியுமா? –அரசு பதிலளிக்க உத்தரவு!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020
highcourt chennai

 

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருவாய் மற்றும் சொத்து சான்றிதழ்களை, பிற மாநிலங்களில் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தில், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள், இந்த சலுகையை பெற தகுதியுடையவர்கள். இந்த இடஒதுக்கீட்டு சலுகையை பெற அந்தந்த தாசில்தாரர்களிடம் இருந்து வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை சமப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சொத்து மற்றும் வருமான சான்றுகள் வழங்க தாசில்தாரர்களுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த ஜூன் 4-ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ரெட்டி நல சங்கம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பிலும், தனிநபர்கள் சார்பிலும் சென்னை உயர் நீ்திமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

 

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை பெறும் வகையில், அவர்களுக்கான வருவாய் மற்றும் சொத்து சான்றிதழை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

 

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசால் வழங்கப்படும் சான்றிதழ்களை, மத்திய அரசு பணிகள் அல்லது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ளதால், பிற மாநிலங்களில் உயர்வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் கல்வி நிறுவனங்களில், இந்த சான்றிதழை சமர்ப்பிக்கும் வகையில் அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

 

இதுகுறித்து அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அரசுத் தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, வழக்குகளின் விசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்