ஊதிய முரண்பாடு களைய வேண்டும், ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பிப்ரவர் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தால் மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பதால், சென்னை மாநகருக்குள் காவல்துறை அனுமதி இல்லாமல் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் சர்ஜித் நயினா முகமது பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு, தங்களது அலுவலக வளாகம், தனியாருக்கு சொந்தமான வளாகம் ஆகியவற்றில் போராட்டம் நடத்தினால் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என தெரிவித்ததுடன், மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் தங்களுடைய கடைமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுத்தியுள்ளனர். மேலும், வேலை நிறுத்ததில் ஈடுபடாமலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் போராட்டம் நடத்துவார்கள் என நம்புவதாக தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.