சென்னை திருச்சி ரயில் பாதையில் திண்டிவனத்திற்கும் விக்கிரவாண்டிக்கும் இடையில் உள்ளது நெடிமொழியனூர் ரயில்வே கேட். இந்த கேட் வழியாக 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் தலைநகருக்கும், அத்தியாவசியப் பணிகளுக்காகவும், பள்ளி, கல்லூரிக்காகவும் தினசரி சென்று வருகிறார்கள். இந்தச் சாலையில் ரயில்வே கிராசிங்கை கடந்து அரசு பஸ் உட்பட கனரக வாகனங்கள் டூவீலர்கள் என தினசரி ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.
ரயில்வே நிர்வாகம், இந்த இடத்தில் ரயில்வே கேட்டை மூடிவிட்டு அதற்குப் பதில் சுரங்கப்பாதை அமைத்து போக்குவரத்திற்கு வழிவகை செய்வதாக அறிவித்தது. ஆனால், அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் சுரங்கப்பாதை அமைக்கக் கூடாது எனவும், ரயில் பாதையைக் கடக்க மேம்பாலம் கட்டித்தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், சுரங்கப்பாதை அமைப்பதால் போக்குவரத்து நிச்சயம் தடைப்படும். காரணம் சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுவிடும் என்றும் கூறியுள்ளனர். இது நிதர்சனமான உண்மை என்பதற்கு அடையாளமாக பல்வேறு ரயில்வே பாதையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதைகளில் சேறுத்தண்ணீர் நிரம்பி மாதக்கணக்கில் போக்குவரத்து இல்லாமல் பாழடைந்து கிடக்கின்றன.
உதாரணத்திற்கு அதே சென்னை டு திருச்சி ரயில்வே பாதையில் விருத்தாசலம் அருகில் உள்ள செம்பளாகுறிச்சி ரயில்வே கேட் எடுக்கப்பட்டு, அந்த இடத்தில் போக்குவரத்திற்காக சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கேயும் இதே நிலைமைதான். அதேபோல் விருத்தாசலம் சேலம் ரயில் பாதையில் பரூர்பட்டி என்ற இடத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதேபோன்று, ரயில்வே கேட் இருந்த இடங்களில், சுரங்கப்பாதை அமைத்து ஏற்கனவே இருந்த போக்குவரத்தை ரயில்வே நிர்வாகம் முடக்கி வைத்துள்ளது.
இதை அனுபவரீதியாக தெரிந்து, நேரில் சென்று பார்த்துவிட்டு வந்த நெடிமொழியனூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அதேபோன்ற நிலை இப்பகுதி மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக நெடிமொழியனூர் ரயில்வே பாதையில் மேம்பாலம் கட்ட கோரிக்கை வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால், ரயில்வே நிர்வாகம் மேம்பாலம் கட்ட முடியாது சுரங்கப்பாதைத்தான் அமைப்போம் என்று பிடிவாதமாக இருந்த நிலையில், இதற்கு தீர்வுகாண சமூக ஆர்வலர் நெடிமொழியனூர் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இவரது மனு தலைமை நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி அடங்கிய முதல் பெஞ்சில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், முறையாக சர்வே நடத்தியிருக்க வேண்டும். ரயில்வே நிர்வாகம் சுரங்கப் பாதை அமைத்தால் அதில் தண்ணீர் தேங்கும், இதனால் பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு எந்தவிதப் பலனும் இல்லை. எனவே அந்தப் பகுதியில் போக்குவரத்திற்காக சுரங்கப் பாதைக்கு பதில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாதிட்டார்.
ரயில்வே துறை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பிடி. ராம்குமார், அந்த இடம் மேம்பாலம் கட்டுவதற்கு ஏற்ற இடம் அல்ல. போக்குவரத்து எண்ணிக்கையையும் அதன் அடர்த்தியையும் கணக்கில் கொண்டு ஆய்வு செய்து மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்து சுரங்கப்பாதை அமைக்கும் முடிவை எடுத்துள்ளது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட முதல் அமர்வு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அனுபவ அடிப்படையிலும் தொழில்நுட்ப ஆய்வுகளின்படியும் சுரங்கப் பாதை அமைப்பது என ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட தண்ணீர் தேங்கும் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். எனவே தடையில்லாத போக்குவரத்தை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். 2017 அக்டோபரில் ரயில்வே வாரியம் பிறப்பித்த சுற்றறிக்கையில் கூறியுள்ள அம்சங்களைப் பின்பற்ற வேண்டும். எந்த வகையிலும் போக்குவரத்து தடைப்படாமல் இருப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும். அப்பகுதி கிராமத்தினருக்கு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும்பட்சத்தில் ரயில்வே அதிகாரிகளின் பரிசீலனைக்கு மனுதாரர் முறையீடு செய்யலாம் என்று கூறி தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.