சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், கோவில் கருவறையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட அனுமதிக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு அமைப்புகள் பல கட்ட போராட்டங்கள் மற்றும் கையெழுத்து இயக்கங்கள் நடத்தியது.
இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கோயிலை 2008 ஆம் ஆண்டு அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அப்போதைய முதல்வர் கலைஞர் நடராஜர் கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
இதனை தொடர்ந்து கோயிலில் ஆண்டுக்கு ரூ. 3 கோடிக்கு மேல் உண்டியல் வருவாய் இருந்தது. மேலும் நேரடியான காணிக்கைகளும் அதிகளவில் வந்தது. அதன் பிறகு அதிமுக ஆட்சி மாற்றத்தால் 2014-ஆம் ஆண்டு மீண்டும் தீட்சிதர்கள் கைக்குக் கோவில் நிர்வாகம் சென்றது. கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றபிறகு, ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் மட்டுமே வருமானம் வருவதாக இந்து அறநிலையத்துறைக்குக் கணக்கைத் தாக்கல் செய்தனர். இதனால் கோயில் வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி அறநிலையத்துறை ஆணையர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும் அறநிலையத்துறை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அரசர்கள், பொதுமக்கள் தானமாக வழங்கிய 3 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நிலம் இருந்த நிலையில் அதில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்தைத் தீட்சிதர்கள் அவர்கள் இஷ்டப்படி தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக இந்த அறநிலையத்துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாகவும் கடந்த 2017-18 முதல் 2021-22 வரையிலான வரவு செலவு கணக்கு புத்தகங்களைத் தாக்கல் செய்யத் தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகள், செலவுகள் குறித்து கணக்கு வைப்பதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தீட்சிதர்கள் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோயிலுக்குச் சொந்தமாக தற்போது எவ்வளவு ஏக்கர் நிலம் உள்ளது என்பது குறித்து வட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அத்துடன் கோயிலுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தீட்சிதர்கள் தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தொடர்பான விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாகத் தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு அக்டோபர் முதல் வாரத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன் பேரில் அறநிலையத்துறையினர் நடராஜர் கோயில் நிலத்தை யார் விற்பனை செய்தார்கள்? தற்போது அந்த நிலங்கள் என்னவாக உள்ளது? யாரிடம் உள்ளது? என்பது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர்.
இதுகுறித்த வழக்கில் சனிக்கிழமை(5.10.2024) சென்னை உயர்நீதிமன்றம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்கக் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை அளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.