கடலூர் மாவட்டம் நைனார் குப்பம் பஞ்சாயத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்ற வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நைனார் குப்பம் பஞ்சாயத்து தலைவரின் செயல் வேதனையைத் தருகிறது. அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 21 ஆம் தேதி நைனார் குப்பம் பஞ்சாயத்து தலைவர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியிருந்தார். மேலும், அவர் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாகவும் கூறினார். அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதே சமயம், ‘மூன்றாம் பாலினத்தவரை வேற்றுமைப்படுத்தி காட்டக் கூடாது. இது சமூகத்தில் வேற்றுமை ஏற்படுத்தும். சமூகத்தில் அனைவரும் சமமானவர்கள் என்பதை உணர வேண்டும். அவர்களுக்கு எதிரான நிகழ்வுகள் நிகழ்த்தப்படுவதை தடுக்க வேண்டும்' என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பட்டா வழங்கியதை எதிர்த்து பஞ்சாயத்து தலைவரின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கும் நடவடிக்கையை கடலூர் மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும். மேலும், தகுதி அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சமுதாயத்தில் சில பிரிவினரால் தவறான முறையில் நடத்தப்படும் மூன்றாம் பாலினத்தவர்களை, சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் இணைக்கு வகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு சட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்தபோதும் கூட அவை முழு அளவில் அமல்படுத்தப்படவில்லை. மூன்றாம் பாலினத்தவர்கள் கிராம திருவிழாக்களில் கலந்து கொள்வதையும், கோவில்களில் வழிபாடு செய்வதையும் உறுதி செய்ய வேண்டும்.’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.