கல்லூரி மீது புகார் அளித்த மாணவியைத் தேர்வு எழுத அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வேளச்சேரியில் குருநானக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அக்கல்லூரியில் பயின்று வரும் லோகேஸ்வரி என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “இளங்கலை பொருளாதார பட்டப்படிப்பில் சேர்ந்து 2 ஆண்டுகளில் கல்விக் கட்டணமாக 53 ஆயிரத்து 825 ரூபாயை தன்னிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிகம் ஆகும். இதே போன்று பல்வேறு மாணவர்களிடமும் ரூ. 15 கோடி ரூபாய் சட்டவிரோதமாகக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், “இதனைக் காரணமாக வைத்து 3ஆம் ஆண்டிற்கான பருவத் தேர்வை எழுதத் தன்னை அனுமதிக்கவில்லை. எனவே தன்னை தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டுதேவானந் அமர்வில் இன்று (06.11.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “நவம்பர் 6ஆம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் பருவத் தேர்வை எழுத மாணவி லோகேஸ்வரிக்கு எழுத அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.