திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை அதிமுக அரசு நிறுத்தி விட்டது என முன்னாள் அமைச்சரும் கழக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9 லட்சத்து 30 ஆயிரம் செலவில் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆலமரத்தடியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்து பேசிய ஐ.பெரியசாமி,
திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட முதியோர் ஊதியத் தொகையை அதிமுக அரசு நிறுத்தி விட்டது. இப்போது உள்ளாட்சித் தேர்தல் வருவதால் தொகுதிக்கு சுமார் 2,000 பேருக்கு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆத்தூர் தொகுதியில் மட்டும் 10,000 பேருக்கு திமுக அரசு வழங்கிய முதியோர் ஊதியத் தொகையை நிறுத்தி உள்ளார்கள். அவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பாக அண்ணாமலை மேல்பகுதி ஆலமரத்துப்பட்டி பிரிவில் விபத்து நடப்பதால் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் உயர்கோபுர விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஆத்தூர் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த விழாவுக்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆலமரத்துப்பட்டி ஊராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். ஆத்தூர் வட்டார ஊட்டச்சத்து திட்ட அலுவலர் காலி செல்வராணி, மைய மேற்பார்வையாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதோடு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் ஒன்றிய முன்னாள் அவைத் தலைவர் துரைராஜ் உள்பட கட்சிக்காரர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.