Skip to main content

‘ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து’ - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 21/08/2024 | Edited on 21/08/2024
High Court order for Enforcement case against Jaffar Sait

தமிழகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாகக் கூறி ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராகத் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஊழல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது கடந்த 2020ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “தனக்கு எதிரான ஊழல் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்துள்ள உத்தரவிட்ட நிலையில் அமலாக்கத் துறை வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது. தனது மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிந்த வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்”  எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஆகியோ அடங்கிய அமர்வில் இன்று (21.08.20124) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ஜாபர் சேட்டுக்கு எதிரான ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க முடியாது” எனக் கூறி ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

சார்ந்த செய்திகள்