தஞ்சாவூர் மாவட்டம், ரயில்வே குடியிருப்புப் பகுதி அருகே ஆஞ்சநேயர் கோவில் ஒன்று இருக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் 7 ஆம் தேதி, இந்தக் கோவிலின் முன்பு 3 பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், அவர்களை வேறு இடத்திற்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.
இதன் பின்னர், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவலர் ஒருவர், அங்கு மது குடித்துக் கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல், பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து பெண் காவலர், காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர், அங்கு மது குடித்துக் கொண்டிருந்தவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் குபேந்திரன், ரவி மற்றும் முத்தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவர்கள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் குபேந்திரன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த மனு மீதான விசாரணை இன்று (05-02-24) நடைபெற்றது. அப்போது நீதிபதி, “இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது. ஆனால், தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு மிகவும் மோசமாகிவிட்டது” என்று கூறி குபேந்திரனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.