நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கைக்காக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களை பயன்படுத்துவார்கள். அதன் அடிப்படையில், மக்களவை தேர்தலையொட்டி வாக்கு எண்ணிக்கைக்காக மதுரை மருத்துவக் கல்லூரியை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கம் சார்பில் ராஜா முகமது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தார்.
அவர் அளித்த மனுவில், ‘மதுரை மருத்துவக் கல்லூரியில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் படித்து வருகின்றனர். தேர்தலுக்காக மருத்துவக் கல்லூரியை பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும், மருத்துவ ஆய்வகங்கள், வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்க மறுக்கிறார்கள். அதனால், தேர்தல் தொடர்பான பணிகளை வேறு இடத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனு இன்று (08-02-24) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாற்று இடத்தை தேர்வு செய்வது குறித்து வரும் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.