கரோனா தொற்று அச்சம், கூட்டம் கூடுவது போன்றவற்றை தவிர்க்கும் வகையில் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களை அகற்றி, வேறு இடங்களில் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி, ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை என்பது மே 9ம் தேதி 28,897 என்று இருந்த நிலையில் மே 10ம் தேதி 28,978 ஆகவும், 11ம் தேதி 29,272 ஆகவும் உள்ளது. மேலும் 43,858 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில் 12,500 கூடுதல் படுக்கைகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 6,487 படுக்கைகள் அமைக்கும் பணி முடிவுற்றுள்ளதாகவும், மீதமுள்ளவை 17 ஆம் தேதி தயாராகும் எனவும், மேலும் 10 ஆயிரம் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறி, சுகாதார துறை செயலாளரின் அறிக்கையாக தாக்கல் செய்தார்.
மேலும், தமிழகத்துக்கு ஒரு நாளுக்கு 20 ஆயிரம் குப்பி ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும் நிலையில், 7 ஆயிரம் குப்பிகளை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தார். தடுப்பூசி கொள்முதல் தொடர்பாக டெண்டர் கோருவது தொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழகத்துக்கு 419 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்ட நிலையில், தற்போது, 519 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார். மேலும், ராணுவ தளவாட ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் எனும் டி.ஆர்.டி.ஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதியை ஏற்படுத்த பி.எம்.கேர் நிதியத்துக்கு விண்ணப்பித்தால் அமைக்கப்படும் என்றார்.
இதையடுத்து, உடனடியாக பி.எம்.கேர் நிதியத்துக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்திய நீதிபதிகள், மருத்துவமனைகளில் தடுப்பூசி மையங்கள் அமைத்துள்ளதால், தடுப்பூசி போட வருபவர்கள் அச்சப்படுவர் எனவும், மருத்துவமனைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க, மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களை அகற்றி வேறு இடங்களில் அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள். மருத்துவமனைகளில் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், வீடுகளுக்கு செல்லாமல் தியாகம் செய்து கொண்டு பணியாற்றுவதாகவும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். புதுச்சேரியைப் பொறுத்தவரை அரசுத்தரப்பில் தெரிவிக்கப்படும் தகவல்கள், ஊடகங்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் கூறும் விவரங்கள் வேறு விதமாக உள்ளதாக கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.