வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி அங்குள்ள பழங்குடியின பெண்களிடம் நாளை (மார்ச் 4, 2023) நேரில் விசாரணை நடத்துகிறார்.
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு சந்தன மரங்கள் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த புகாரின் பேரில் 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் வீடு வீடாகச் சோதனை நடத்தினர். அப்போது பழங்குடியின ஆண்கள், பெண்கள் பலரை தாக்கி சித்திரவதை செய்ததோடு, 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பின.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர், வாச்சாத்தி வழக்கை சிபிஐ காவல்துறைக்கு மாற்றும்படி வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 1996 ஆம் ஆண்டு சிபிஐ காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்தனர். வழக்கின் விசாரணை முடிந்து தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2011 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் பலர் உயிரிழந்து விட, எஞ்சிய 215 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள், சாதாரண வனக்காவலர்கள் என மொத்தம் 17 பேரில் 12 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு தலா ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தர்மபுரி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
மேலும், வரும் சனிக்கிழமை (மார்ச் 4, 2023) இந்த சம்பவம் தொடர்பாக வாச்சாத்தி மலை கிராமத்தில் நீதிபதி நேரடியாக ஆய்வு செய்ய உள்ளார். அப்போது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக நீதித்துறை தரப்பில் கூறப்படுகிறது.