![The High Court has dismissed the BJP's petition.](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ww9ExJTcUls16l9aGbcvJI2NejIO4Q7w5bJgM2F18a4/1626171706/sites/default/files/inline-images/neet2_8_0.jpg)
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள நீட் ஆய்வு குழுவிடம் கருத்துகளைக் கண்டிப்பாக பதிவுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிக்கையை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், நீட் பாதிப்பை ஆராய அரசு சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் குழுவை எதிர்த்து பாஜகவின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்ற உத்தரவுபடிதான் நடத்தப்படுகிறது. எனவே அதனை எதிர்த்து முடிவெடுக்க வேண்டும் என்றால் உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றுதான் எந்த முடிவும் எடுக்க மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறது என பாஜகவின் கரு. நாகராஜன் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அமைத்ததை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றுவந்தது.
கரு. நாகராஜனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் மனுதாக்கல் செய்திருந்தன. அதேபோல் நந்தினி என்ற மாணவி இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மாணவர்கள் பிரச்சினையில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (13.07.2021) தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. மக்கள் கருத்துக் கேட்பு தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மத்திய அரசு சட்டங்களுக்கு எதிரானதாக நீட் ஆய்வு குழு அமைக்கப்படவில்லை. நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட இந்தக் குழு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானதாக இல்லை. எனவே தமிழ்நாட்டில் நீட் பாதிப்பு குறித்து ஆராய அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு செல்லும் என உத்தரவிட்டு தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜனின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.