Skip to main content

சூரப்பா வழக்கு; இடைக்கால உத்தரவை நீட்டித்தது உயர்நீதிமன்றம்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

High Court extends interim order in surappa case

 

அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்றுவிட்டதால், தன்னை பணி நீக்கம் செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் செல்லத்தக்கதல்ல என முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராகக் கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்த தமிழக அரசு, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

 

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்குத் தடை கோரியும், சூரப்பா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரப்பா தரப்பில் அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சித்ததால், இடஒதுக்கீடு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தவறான கருத்து காரணமாகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து விசாரணை ஆணையம், அறிக்கை அளித்தாலும், அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 

இந்த வழக்கு இன்று நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சூரப்பா தரப்பில் தன்னை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற காரணத்திற்காகவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது தான் ஓய்வுபெற்றுவிட்டதால், விசாரணை ஆணையம் செல்லத்தக்கதல்ல எனவும் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை மற்றொரு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

நீதிபதி கலையரசன் ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாலும், அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை கூடாது என இடைக்கால உத்தரவு உள்ளதாலும் வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி கோவிந்தராஜ், இடைக்கால உத்தரவை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து, வழக்கை ஜூன் மாதத்திற்குத் தள்ளிவைத்துள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்