டாஸ்மாக்கில் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதைத் தடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, இன்று (14.12.2020) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், "தமிழகத்தில் உரிய விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, 3,000 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக" தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "எது எதுக்கெல்லாம் சி.சி.டி.வி கேமிரா எனும் விவஸ்தையே இல்லையா? பெரும்பாலானோர் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டே மது வாங்க வருகிறார்கள். அப்படி இருக்கையில், மதுவைக் கூடுதல் விலைக்கு விற்பது அவர்களிடமே கொள்ளையடிப்பதற்குச் சமம்" எனக் கருத்துத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசுகையில், "கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், கூடுதல் விலைக்கு மதுவை விற்றால், நீதிபதிகளே வந்து ஆய்வுசெய்ய நேரிடும்" என எச்சரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 07-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து 'நக்கீரன்' இணையதளத்திடம் கருத்துத் தெரிவித்த அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, "மதுக்கடைகள் இல்லாத தமிழகமே எங்களின் நோக்கம். ஆனால், நடைமுறையில் மதுபான விற்பனையில் ஊழல் பெருகிவருகிறது. அதனால், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தோம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் நான் வீடியோ கான்ஃபரன்சிங்கில் கலந்து கொண்டேன்.
அப்போது, டாஸ்மாக்கில் முறையாக ரசீது வழங்கப்படுகிறதா? கொள்ளையடித்து மதுவாங்குபவரிடமே கொள்ளையடிப்பதா? மது தயாரிப்பதற்கு என்ன என்ன பொருட்கள் பயன்படுத்தபடுகின்றன? டாஸ்மாக்கிற்கு, யார் யாரிடம் இருந்து மது கொள்முதல் செய்யப்படுகிறது? என்பன போன்ற நீதிபதிகளின் சரமாரியான கேள்விகளால் அரசுத் தரப்பு வழக்கறிஞர் திக்குமுக்காடிப் போனார். அரசுத் தரப்பு சி.சி.டி.வி பொருத்தி, உரிய விலையில் மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தது. அதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், எது எதற்கெல்லாம் சி.சி.டி.வி என்பதற்கு விவஸ்தையே இல்லையா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குத் தொடுத்த என்னை, நீதிபதிகள் பாராட்டினர்" இவ்வாறு கூறினார்.