அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்திற்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு தீர்ப்பளித்தார்.
அதில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது; ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. கட்சி விதிகளுக்கு உட்பட்டு அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட வேண்டுமென பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஜூலை 11- ஆம் தேதி அன்று பொதுக்குழு நடக்கும் என கடந்த ஜூன் 23- ஆம் தேதியே பொதுக்குழு நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையைப் பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். நீதிமன்றத்தின் மூலமாக சாதிக்க முயற்சிக்கிறார்கள், ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம்தான் மேலோங்கி இருக்கும். ஒருங்கிணைப்பாளர் என்பவர் கட்சி நலன், வளர்ச்சிக்கு ஏற்றவாறு உறுப்பினர்களை சமாதானம் செய்ய வேண்டும். பொதுக்குழுவில் தீர்வு கிடைக்காவிடில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தடையிடாது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தவில்லை எனில் உச்சநீதிமன்றம்தான் பரிசீலிக்க முடியும்" என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சென்னை ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் தயாராக இருந்தபோதிலும், உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அறிந்த எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மேடை ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.