கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் அங்கு நிகழ்ந்த கலவரத்தின் காரணமாக பள்ளி மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளியைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சீரமைப்பு பணிகள் நிறைவுற்றதால் பள்ளியைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என பள்ளி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கொடுத்த பரிந்துரையை ஏற்று சீரமைப்பு பணிகள் முழுமையாக நடந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் 504 மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் ஒரு மாதத்திற்கு நேரடி வகுப்புகளைத் தொடங்க நீதிபதி உத்தரவிட்டார். எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புக்களைத் துவங்குவது குறித்து பின்னர் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் அந்தப் பள்ளியில் 9ஆம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புக்கள் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.