திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழக அரசு சார்பில் ‘நிறுவனங்களின் நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் மலர் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (25.11.2023) மாலை 4:00 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த கருத்தரங்கை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், நிறுவனங்களின் நாயகர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழுத் தலைவருமான கே.என். நேரு தொடங்கி வைக்க உள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றி விழா மலரை வெளியிட உள்ளார்.
மேலும் இந்தக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக ‘நிறுவனங்களின் நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள் எஸ். ரகுபதி, தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.