Skip to main content

தொல்நடைக் குழு ஒருங்கிணைத்த தொல்நடை பயணம்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

 

தொல்நடைக் குழு ஒருங்கிணைப்பில் தொல்நடை பயணமாக தொல்லியல் களங்களை பொதுமக்களும் மாணவர்களும் பார்வையிட்டனர்.

 

சிவகங்கை தொல்நடைக் குழு, தொன்மை மரபு சார்ந்த செய்திகளைப் புதிதாகக் கண்டுபிடித்து அடையாளப்படுத்துவதும், ஆவணப்படுத்துவதும் மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொது மக்களிடையே தொன்மை மரபுகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியையும் தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தொல்லியல் இடங்களைப் பார்வையிட தொல்நடை பயணத்தை அவ்வப்போது தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு முன்பாக இரண்டு தொல்நடை பயணத்தை நடத்தி முடித்திருந்த நிலையில் நேற்று மூன்றாவது களப்பயணம் நடைபெற்றது.

 

சிவகங்கை தொல்நடைக்குழு ஒருங்கிணைப்பில் தொல்நடை பயணம் நடைபெற்றது. சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த பயணத்தில் முதல் நிகழ்வாகச் சென்று பார்வையிடக்கூடிய இடங்களைக் கையேடாகத் தயாரிக்கப்பட்டது. அந்த கையேட்டினை சிவகங்கை தொல்நடைக் குழு தலைவர் நா. சுந்தரராஜன் வெளியிட ஓய்வுபெற்ற தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பா.இளங்கோ பெற்றுக் கொண்டார். 

 

தொடர்ந்து படமாத்தூரை அடுத்த சித்தாலங்குடி மகாராஜா கோவில், மதுரை மாவட்டம் வரிச்சூர் குன்னத்தூர் குடவரைகள், சமணப்படுக்கைகள், தமிழி எழுத்து ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் கீழடி அருங்காட்சியகம், கீழடியில் திறந்த நிலையில் உள்ள ஏழாம் கட்ட அகழாய்வுத்தளம், தூதை வட்டெழுத்து கல்வெட்டுடைய நடுகல், உலகப் புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டு கட்டடக்கலையில் கட்டப்பட்ட இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் கோவில் ஆகியவற்றை பார்வையிட்டனர். அதேசமயத்தில் அதன் தொன்மையும் மரபும் சார்ந்த செய்தியை அறிந்து அதை பாதுகாக்க விழிப்புணர்வு பெற்றனர். 

 

தொல்லியல் களத்தில் அவ்விடத்திற்கான சிறப்புகளை சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா விளக்கிக் கூறினார். சிவகங்கை தொல்நடைக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், காளையார்கோவில் நாட்டிய பள்ளி, திருக்கானப் பேருரார் கலைக்களஞ்சிய மாணவர்கள் எனப் பல நிலைகளிலும் ஆர்வம் உடையவர்கள் தொல்நடை பயணத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் நரசிம்மன், பொருளாளர் பிரபாகரன், துணைத் தலைவர் முனீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்