தர்மபுரி மாவட்டம் க.திண்டலானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் அரசு மதுபானக் கடையில் தற்காலிக அட்டைப் பெட்டி சேகரிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், கடத்தூரில் கடந்த 13-ஆம் தேதி மதுபானம் வாங்க வந்த கடத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் ஏழுமலைக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மது போதையில் இருந்த அந்த இளைஞர்கள் ஏழுமலை மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஏழுமலையின் சகோதரர்கள் மூன்று பேரையும் அந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஏழுமலையை தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.சி.க கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா தலைமையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிராம மக்களோடு தருமபுரி மாவட்டக் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து பிணையில் வர முடியாத அளவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வி.சி.கவின் முன்னணி பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர்.