தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்து பாதுகாக்க கோரிய வழக்கினை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ’’மே 22, 23 தேதிகளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் எந்தவித காவல் சீருடை அணியாமல் போலீஸ் வாகனம் மீது ஏறி பல மீட்டர் தூரம் குறிபார்த்து சுடக்கூடிய ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி தனித்தனியாக பொதுமக்களின் வாய்,தலை உள்ளிட்ட உடல் உறுப்புகளை நோக்கி சுட்டதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் துப்பாக்கி சூட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பின்பற்றவில்லை. எனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தினை சிபிஐ போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி செல்வம்,நீதிபதி பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதே கோரிக்கைகளுடன் கூடிய மனுக்கள் நிலுவையில் இருப்பதால் அந்த மனுக்களுடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.