உக்ரைனில் சிக்கித் தவிக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், புலம் பெயர்ந்தவர்களை மீட்க உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " ‘ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டிற்குள் ராணுவ நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி படிப்போர் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் இருப்பதாக தெரிய வந்துள்ளன.
தமிழ்நாட்டில் வசிக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாயிலாக பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மாநில தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உள்ளுறை ஆணையர் ஆகியோர் தொடர்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
உக்ரைனில் உள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு, இதற்கென நியமிக்கப்பட்டுள்ள தொடர்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம். மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸை 9445869848, 9600023645, 9940256444, 044-28515288 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு பொதிகை இல்லத்தின் உக்ரைன் அவசர உதவி மையத்தை 9289516716 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், ukrainetamils@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்" என்று கூறியுள்ளார்.
மேலும், சேலம் மாவட்ட 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையினை 0427 2450498, 0427 2452202 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், சேலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணனை 9445008148 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம" இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.